இந்திய கால்பந்து அணி வரும் 22 முதல் 28-ம் தேதி வரையில் கிர்கிஸ்தான், மியான்மர் அணிகளுடன் முத்தரப்பு கால்பந்து தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தின் சிவகங்கை, கண்டனூரை சேர்ந்த சிவசக்தி நாராயணன் இடம்பிடித்துள்ளார். அவரை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். இந்த தொடர் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடருக்காக சுமார் 23 வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் பட்டியலை நேற்று அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அறிவித்தார். இந்தப் பட்டியலில் முன்கள வீரரான சிவசக்தி இடம்பிடித்துள்ளார். 21 வயதான அவர் ஏழாம் வகுப்பு படித்தபோது கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டதாக தெரிகிறது. ஐஎஸ்எல் தொடரில் பெங்களூரு அணிக்காக முன்கள வீரராக அவர் விளையாடி வருகிறார்.
“இந்தியா, கிர்கிஸ்தான், மியான்மர் நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் இந்திய அணிக்காக விளையாட சிவகங்கை, கண்டனூரை சேர்ந்த சிவசக்தி நாராயணன் தேர்வாகியுள்ளார். மணிப்பூரில் நடக்க உள்ள இப்போட்டியில் சாதிக்க தம்பிக்கு வாழ்த்துகள்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

