ஆசிரியர் மீது தாக்குதல்: 17 மாணவர்கள் கைது

புத்தளம் – தில்லையடியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தில்லையடி பாடசாலையொன்றில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம் கடந்த செவ்வாயன்று நடைபெற்றது. இதன்போது, கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டது. 

சில மாணவர்கள் முடி வளர்த்துக்கொண்டு பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், ஆசிரியரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

27 வயதான குறித்த ஆசிரியர் கடமை முடிந்து வீடு திரும்பிய போது, மாணவர்கள் அவரை கிண்டல் செய்துள்ளதுடன், ஆசிரியர் தன் வீட்டை சென்றடைந்த போது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *