அனைத்து அரச நிர்வாக சேவை அதிகாரிகளும் இன்று திங்கட்கிழமை (29) முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தலைவர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கூறிய அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தலைவர் எச்.ஏ.எல் உதயசிறி,
“இன்று, கூட்டுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரிகள், நாடளாவிய, இணையான சேவைகள் மற்றும் திணைக்கள சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம், உள்நாட்டு இறைவரி தொழிற்சங்க ஒன்றியம், கல்வி நிர்வாக சேவை தொழிற்சங்க ஒன்றியம் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளன.
மேலும், அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

