அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று வரும் ஜூன் 3-வது வாரத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜூன் 21 முதல் 25-ம் தேதி வரை பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். பிரதமரின் பயண தேதி விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும்.
அமெரிக்க பயணத்தின்போது அந்த நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார். அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அவருக்கு இரவு விருந்து அளிப்பார். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்படும்.
வரும் மே மாதம் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின்போது பிரதமர் மோடியும் அதிபர் ஜோ பைடனும் சந்திக்க உள்ளனர்.

