அமெரிக்கா – தென் கொரியா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மோசமான ஆபத்தை உருவாக்கும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரியாவில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்கா சமீபத்தில் ஒப்புக்கொண்டது. மேலும், வட கொரியாவின் அணுசக்தி அச்சுறுத்தலை தென் கொரியா எதிர்கொள்ள அந்நாட்டை அணு ஆயுத திட்டத்திலும் அமெரிக்கா ஈடுபடுத்தி வருகிறது. தென் கொரியா – அமெரிக்கா இடையேயான இந்த ஒப்பந்தம், இவ்வாரம் வாஷிங்டனில் அதிபர் ஜோ பைடன், தென் கொரிய பிரதிநிதி யூன் சுக்-யோல்ஸு இடையே நடந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வட கொரிய அதிபர் கிம்-மின் சகோதரி கிம் யோ ஜாங் கூறும்போது, “கொரிய தீபகற்பத்தின் அருகே அணு ஆயுதங்களை எதிரிகள் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு வட கொரியாவின் தற்காப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கும். எதிரிகளின் நடவடிக்கையானது வட கிழக்கு ஆசியா மற்றும் உலகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பில் இன்னும் மோசமான ஆபத்தை உருவாக்கும்” என்று அவர் எச்சரித்தார்.
முன்னதாக அமெரிக்கா – தென் கொரியா கடந்த மாத இறுதியில் கொரிய பகுதியில் கூட்டாக ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

