சமூர்த்தி கொடுப்பனவுகள் உள்ளிட்ட நலன்புரி உதவிகளை வழங்கும் போது தகுதியில்லாதவர்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன.
இந்த பிழையான வழியில் இருந்து மீண்டு நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஷ்வசும வேலைத்திட்டம் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் கடந்த 40 வருடங்களில் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வழங்கும் நலன்புரிகள் மற்றும் நன்மைகள் தொடர்பான வாக்குறுதிகள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரிதும் தாக்கத்தை செலுத்தியது. ஒவ்வொரு கட்சியும் ஏட்டிக்கு போட்டியாக இவ்வாறு வாக்குறுதிகளை வழங்கி நிவாரணங்கள், நலன்புரி விடயங்களை வழங்கியது. இவ்வாறான நிலைமையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் போது நெருக்கடிகள் ஏற்பட்டன. இன்று இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் வறுமையே காரணமாகும்.
சமூர்த்தி கொடுப்பனவு விடயத்தில் தகுதியில்லாதவர்களுக்கும் அது கிடைப்பதாக நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். ஆனால் தகுதி அற்றவர்களை நீக்குவதற்கு யாரம் முற்படுவதில்லை.அதனை நீக்க முற்படும்போது ஏற்படுகின்ற அரசியல் தலையீடு காரணமாக தகுதியற்றவர்கள் தொடர்ந்தும் அதில் நன்மை பெற்று வருகின்றனர்.
இதேவேளை அனைத்து துறைகளும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ளன. விவசாயிகள் இவ்வாறாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக விவசாயம் வீழ்ச்சியடைவது உணவு பற்றாக்குறைக்கு சென்று, வறுமை நிலைமை ஏற்பட்டு நோய் அதிகரிக்கும். அதனால் வைத்தியசாலைகள் நிறையும். இதற்காக அதிகளவில் செலவிட நேரிடும். இதனால் விவசாயத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனால் வருமான முரண்பாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் வறுமை நிலைமைக்கு தீர்வு காண முடியுமாக இருக்கும் என்றார்.

