அநுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு போதனா வைத்தியசாலைகளின் சிறுவர் சிகிச்சை பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. குறித்த பிரிவில் பணியாற்றிய விசேட வைத்திய நிபுணர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளமையின் காரணமாக இவற்றை மூட வேண்டியேற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கை காரணமாக மாதாந்தம் சுமார் 50 வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்காக விண்ணப்பிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
துரதிஷ்டவசமாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பேராசிரியர் பிரிவு மூடப்பட்டுள்ளது. குறித்த பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடு சென்றுள்ளமையின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் என்று நாம் எதிர்வு கூறியிருந்தோம்.
அதிகாரிகளிடமும் , மக்களிடமும் நாம் இது தொடர்பில் தெரிவித்திருந்தோம். எனினும் எவருமே அவதானம் செலுத்தாமையின் பிரதிபலனே இதுவாகும். 4 விசேட வைத்திய நிபுணர்கள் மாத்திரம் இருந்த வைத்தியசாலையில் , அவர்கள் நால்வருமே வெளிநாடு செல்லும் வரை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்றார்.

