அணிசேரா வெளிவிவகாரக் கொள்கையை தெளிவாக எடுத்துரைத்துள்ளமை பொருளாதார முயற்சிகளுக்கு உந்து சக்தியாகும் – சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் விஜயத்தின் போது தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இலகு ரயில் திட்டத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கும் இந்நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜப்பானின் ஆதரவை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கும்   ஜப்பானிய பிரதமருடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி மேற்கொண்ட தலையீடானது ஒரு மேம்பட்ட இராஜதந்திர அணுகுமுறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவுக்கு அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேம்படுத்துவதற்காக உயர்மட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வர்த்தக சபைகளுடன் கலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் வெளிப்படையான கருத்துக்கள் நாட்டின் நற்பெயரை உயர்த்த உதவியது.

ஜப்பானில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28ஆவது நிக்கெய் சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி ஆற்றிய உரை ஜப்பான் உள்ளிட்ட பிராந்திய வல்லரசுகளின் பாராட்டைப் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தொலைநோக்கற்ற தீர்மானங்களை சீர்செய்ய  அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலகுரக ரயில் திட்டம் கைவிடப்பட்டமையே ஜப்பானுடன் ஓரளவு விரசல் ஏற்பட காரணமாக அமைந்தது. இந்த விடயத்தை, தம்மை  புறக்கணிப்பதாகவோ அல்லது சிறுமைப்படுத்துவதாகவோ தான் ஜப்பான் கருதியது. என் கருத்துப்படி, அந்த திட்டம் உண்மையில் நம் நாட்டிற்கு உகந்த விடயமாகும்.

ஜப்பானின் இலகுரக ரயில் திட்டத்தை முன்னெடுத்திருந்தால், அது நம் நாட்டுக்கு சிறந்த ஒன்றாக அமைந்திருக்கும். ஆனால் கடந்த காலத்தில் எடுத்த முட்டாள்தனமான முடிவால் அந்த வாய்ப்பை இழந்தோம். ஜனாதிபதி இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளமையால் ஜப்பானுக்கு தவறான புரிதல் இருந்தால் அதனை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது.

சர்வதேச நாணய நிதியம் சுமார் 3 பில்லியன் டொலர்களை கடன் மறுசீரமைப்பிற்கு வழங்கியது. இந்த இலகுரக ரயில் திட்டத்தில் ஜப்பான் சுமார் 2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய எதிர்பார்த்திருந்தது. இந்த  முதலீடு கடனாக இருந்தாலும், அதை மானியமாகவும் எண்ணலாம். இது மிகக் குறைந்த வட்டியில் கிடைத்த சிறந்த முதலீடு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயம் காரணமாக நம்நாட்டுக்கு 2 பில்லியன் டொலர்கள் முதலீட்டு உதவிகள் கிடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நமது நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான நல்ல வாய்ப்பாகக் குறிப்பிடலாம்.

எதிர்காலத்தில் இரு தரப்பினரின் இணக்கப்பாட்டின்றி வெளிநாட்டு திட்டங்களை நிறுத்த முடியாத வகையில் சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி கருத்து  வெளியிட்டுள்ளார். முதலீடுகளின் பலனை நாடு அடைய வேண்டுமானால், அத்தகைய கருத்து  சட்டமாக்கப்படுவது மிகவும் முக்கியமானது.

முதலீடுகளுக்கு அழைப்பு விடுக்கும் நாடு  என்ற வகையில் ஏனைய நாடுகளிலிருந்து  முதலீடுகள் வரும்போது இவ்வாறான சட்டம்  மிகவும் முக்கியமானது. ஒரு நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , அணிசேராக் கொள்கையை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத நாடாக இலங்கையைக் குறிப்பிடலாம். நமது டிஜிட்டல் பொருளாதாரம், போக்குவரத்து, துறைமுக நகரம் உள்ளிட்ட முதலீடுகள், முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானவை. டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு செல்லவில்லை என்றால், ஒரு நாடாக முன்னேற முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *