அடுத்த வருடத்திலிருந்து நாளாந்தம் எரிபொருள் விலைகளில் திருத்தம் – அமைச்சர்  காஞ்சன

நாட்டில் தற்போது விலை சூத்திரத்துக்கு ஏற்ப மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் எரிபொருள் விலை திருத்தங்களை, அடுத்த வருடம் முதல் நாளாந்தம் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் சனிக்கிழமை (21) கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தினால் தற்போது எடுக்கப்பட்டுள்ள கொள்கை ரீதியான தீர்மானம் யாதெனில் மாதத்துக்கு ஒரு முறை அரசாங்கத்தினால் விடுக்கப்படும் அறிவிப்புக்கு பதிலாக, எரிபொருளை விநியோகிக்கும் நிறுவனத்தினால் தமக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் நாளாந்தம் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வது சிறந்ததாகக் காணப்படும் என்பதாகும்.

அடுத்த வருடம் முதல் இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் மாதாந்தம் 10 அல்லது 15 ரூபாவால் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதை விட, நாளாந்தம் சதங்களில் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுவது சிறந்ததாகும். இதன் மூலம் இலாபம், நஷ்டம் இரண்டையுமே நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியேற்படும்.

தற்போது விலைகள் குறைக்கப்படும் போது நஷ்டத்தை எரிபொருள் நிறுவனங்கள் ஏற்கின்றன. அதே போன்று விலை அதிகரிக்கும் போது இலாபத்தையும் அந்த நிறுவனங்களே பெறுகின்றன. இந்த முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு எமக்கு 3 பில்லியன் ரூபா தேவையாகும். உலக நாடுகளின் முன்னேற்றத்துக்கு ஏற்ப நவீனமயமாக்கலுக்குள் நாமும் பிரவேசிக்க வேண்டும்.

எரிபொருள், மின் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் முற்போக்குடன் செயற்பட வேண்டும். 9 ஆண்டுகள் மின் கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே தற்போது ஒரே சந்தர்ப்பத்தில் பாரியளவில் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளது. இஸ்ரேல் – பலஸ்தீன் மோதலால் எரிபொருள் விலை உலக சந்தையில் 25 சதவீதத்தினால் அதிகரிக்கக் கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பை நாம் பேணி வருகின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *