உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் ஆகியவற்றை மேற்கோள்காட்டிக் கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை எவ்வித சமரசமுமின்றிப் பாதுகாப்பது இன்றியமையாததாகும் எனத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்மொழிப்பட்டள்ள உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பல்வேறும் தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் நிலையில், அவ்விரு சட்டமூலங்களும் எதிர்வரும் செவ்வாய்கிழமை (3) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்துத் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், இலங்கைக்கு நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலமொன்று தேவைப்படுமாக இருந்தால், தொழில்நுட்பத்துறை சார்ந்தோர், சிவில் சமூகத்தினர் மற்றும் பல்துறைசார் நிபுணர்கள் போன்ற தரப்பினரின் கருத்துக்கள் அதில் உள்வாங்கப்படுவது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

